பெங்களூரு : கர்நாடகாவில் உள்ள 224 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. அதோடு பஞ்சாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஆம் ஆத்மி கட்சியும் கர்நாடக தேர்தலில் களமிறங்கி உள்ளது.
இதில் பாஜக 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஒரு தொகுதி விவசாய சங்கத்துக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 207 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 133 தொகுதிகளில் களமிறங்கி உள்ளன. 918 சுயேச்சைகள் உட்பட மொத்தமாக 2 ஆயிரத்து 613 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்த தேர்தல் 2024ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவும், தென் இந்தியாவில் கால்பதிக்க கர்நாடகா வாசலாகவும் கருதப்படுவதால் ஆட்சியைத் தக்க வைக்க பாஜகவும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன.
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், தேர்தல் இணை பொறுப்பாளர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் கடந்த 3 மாதங்களாகத் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர்.
பிரதமர் மோடி கடந்த 7 நாட்களில் மட்டும் 31 மாவட்டங்களில் நடைபெற்ற 18 பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பெங்களூரு, மைசூரு, மங்களூரு உட்பட 5 முக்கிய நகரங்களில் வாகன பேரணி மேற்கொண்டார். மறுபுறம் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் என பெரும் பட்டாளமே திரண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.