பெங்களூரு : கர்நாடகா சட்டப் பேரவை தேர்தல் நிறைவு பெற்றது. மாலை 6 மணி நிலவரப்படி ஏறத்தாழ 72.54 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை ஆர்வமாக செலுத்தினர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டுத் துறை சார்ந்த பிரபலங்களும் தங்களது வாக்குகளை ஆர்வமாக செலுத்தினர். ஆட்சியைத் தக்கவைக்க பாஜகவும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் தீவிர முனைப்புடன் காத்திருக்கின்றன.
மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மாலை 6 மணி நில்வரப்படி மாநிலத்தில் ஏறத்தாழ 72.54 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. வாக்குப்பதிவு நிறைவு பெற்றதை அடுத்து மையத்தின் நுழைவாயில்கள் மூடப்பட்டன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சீல் வைக்கும் பணியில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
அதேநேரம் வாக்குப்பதிவு மையத்தில் வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு அவர்கள் மட்டும் வாக்களிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டு உளளது. இதனால் ஓரிரு இடங்களில் மாலை 6 மணியை தாண்டியும் வாக்குப்பதிவு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவைப்படுகின்றன. கர்நாடகாவில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜேடிஸ் கட்சிகளிடையே பிரதான போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி உளிட்ட சில கட்சிகளும் தேர்தலை எதிர்கொண்டுள்ளன.