பெங்களூரு : கர்நாடகா சட்டப்பேரவைக் கூட்டத்தில் மசோதா தாக்கலின் காகிதத்தை கிழித்தும், சபாநாயகர் இருக்கை மீது தூக்கி வீசியும் அமளியில் ஈடுபட்ட 10 பாஜக எம்.எல்.ஏக்களை நடப்பு சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் இருந்து இடை நீக்கம் செய்து சபாநாயகர் யு.டி. காதர் உத்தரவிட்டு உள்ளார்.
கடந்த ஜூலை 3ஆம் தேதி கர்நாடக சட்டப் பேரவை கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்ற நிலையில், கூட்டத்திற்காக ஐஏஎஸ் அதிகாரிகளை மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி தவறாக பயன்படுத்தியதாக கூறி சட்டப் பேரவைக் கூட்டத்தில் பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அவையின் முன்னாள் திரண்டு கோஷம் எழுப்பிய பாஜக உறுப்பினர்கள், அங்கிருந்த மசோதா உள்ளிட்ட ஆவணங்களின் காகிதங்களை கிழத்து, சபாநாயகர் இருக்கை மீது தூக்கி வீசியதாகவும் கூறப்படுகிறது. உணவு இடைவேளைக்கு பின்னரும் பாஜக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு உள்ளனர்.
சட்டப்பேரவையில் பேசிய முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் கட்சி அடக்குமுறை வெறுப்பு அரசியலில் ஈடுபடுவதாகவும், சபாநாயகர் பதவி தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் கூறினார். மேலும் சபாநாயகர் கை பொம்மை போன்று உள்ளதாகவும் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக செயல்படுவதாகவும் தெரிவித்தார்.