சிவமோகா: சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு கர்நாடகா மாநிலம், சிவமோகா மாவட்டத்தில் நடத்தப்பட்ட மாட்டு வண்டி பந்தயங்களில் இரு பார்வையாளர்கள் மாடு முட்டி உயிரிழந்தனர். கோனகானவள்ளி கிராமத்தில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
மாட்டு வண்டி பந்தயத்தைக் காண அண்டை கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். அல்கோலா காலனியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி லோகேஷ் ஆர்வமுடன் மாட்டு வண்டி பந்தயத்தைக் காண வந்துள்ளார். திடீரென ஓடுபாதையை விட்டு வெளியேறிய மாடு, பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது.
மாடு முட்டி தாக்கியதில் நெஞ்சு பகுதியில் படுகாயம் அடைந்த லோகேஷ் சாலையில் சரிந்து விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக லோகேஷின் மனைவி அளித்த புகாரில் விழா கமிட்டியினர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.