பெங்களூரு :கர்நாடக சட்டப்பேரவை சபாயநாயகர் பதவியை துரத்தும் துரதிர்ஷ்டத்தை காரணம் காட்டி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரும் சபாநாயகர் பதவியை மறுத்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப் பேரவைக்கு கடந்த மே. 10ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு மே. 13ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.
இந்நிலையில், நீண்ட இழுபறிக்குப் பின்னர் கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார். கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணியாக இருந்தவரும் முதலமைச்சராக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த மே. 20ஆம் தேதி பெங்களூருவில் உள்ள கண்டீவரா மைதானத்தில் நடைபெற்ற விழாவில் கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்றுக் கொண்டார். துணை முதலமைச்சராக டி.கே. சிவகுமார் பொறுப்பேற்றார். தொடர்ந்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே உள்ளிட்ட 8 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
மீதமுள்ள அமைச்சர்கள் விரைவில் பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது. முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், பிரசாரத்தின் போது அளிக்கப்பட்ட பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம், பட்டதாரி இளைஞர்களுக்கு ஊக்கத் தொகை உள்ளிட்ட 5 வாக்குறுதிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் சித்தராமையா, மே. 22ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு அவசர சட்டப் பேரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாகவும், வாக்குறுதிகள் குறித்து கூட்டத்தில் முடிவு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். மூத்த காங்கிரஸ் தலைவர் ஆர்.வி. தேஷ்பாண்டே தற்காலிக சபாநாயகராக செயல்படுவார் என்றும்; பின்னர் சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், கர்நாடக சபாநாயகராக பதவி வகிக்க காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் மறுப்புத் தெரிவித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகராக பதவி வகிப்பதில் நிலவும் துரதிர்ஷ்டங்கள் குறித்த கருத்துகள் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்களிடையே நிலவுவதாக கூறப்படுகிறது.
கர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகராக பதவி வகிக்கும் நபருக்கு அந்த தேர்தலே கடைசித் தேர்தலாக அமைவதாகவும், அதன் பின் வரும் தேர்தலில் சபாநாயகராக இருந்தவர் படுதோல்வியைத் தழுவி அவரது அரசியல் வாழ்க்கையே அஸ்தமனமாகி விடுவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
அதற்கு உதாரணமாக கே.ஆர். பெட் தொகுதியில் வெற்றி பெற்று எஸ்.எம். கிருஷ்ணா அமைச்சரவையில் 2004ஆம் ஆண்டு சபாநாயகராக பதவி வகித்த கிருஷ்ணா, 2008ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார். அதேபோல் 2013ஆம் ஆண்டு சபாநாயகர் பதவியில் இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ககுடு திம்மப்பா, 2018ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
5 முறை சட்டமன்ற உறுப்பினர் பதவி வகித்த கே.பி. கொலிவாட் 2016ஆம் ஆண்டு சபாநாயகராக பதவி வகித்த நிலையில், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். மேலும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலிலும் தோல்வியைத் தழுவியது அவரது அரசியல் வாழ்க்கையை அஸ்தமனமாக்கியது.
கடந்த காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சியில் கூட சபாநாயகராக பதவி வகித்த ரமேஷ்குமார் நடப்பு சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியைத் தழுவினார். இப்படி கர்நாடக சட்டப் பேரவையில் சபாநாயகராகப் பதவி வகிக்கும் அனைவருக்கும் அதுவே கடைசியாக அமைவதால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் சபாநாயகர் பதவியை மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் திங்கட்கிழமை தொடங்கும் 3 நாள் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்திற்குக் கூட மூத்த காங்கிரஸ் உறுப்பினர் ஜி. பரமேஷ்வரா சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டதாகவும், அவர் மறுத்த நிலையில், ஆர்.வி. தேஷ்பாண்டே தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க :கிழக்கு லடாக்கில் சீனாவின் ஊடுருவல் - ஜி7 மாநாட்டில் உண்மையை உடைத்த பிரதமர் மோடி!