பெங்களூரு:கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சேத்தன் குமார். இவர் “சேத்தன் குமார் அஹிம்சா'' என்ற பெயரில் ட்விட்டர் கணக்கை வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை தனது டிவிட்டர் பதிவில், "சாவர்க்கரின் பொய்களால் இந்து மதம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ராமர் ராவணனை வீழ்த்திய பிறகு அயோத்தி திரும்பியதும் இந்தியா பிறந்தது என கூறியது பொய். 1992: பாபர் மசூதி இருந்த இடம் ராமர் பிறந்த இடம் என கூறுவதும் பொய்.
2023: திப்புவை கொன்றது ஊரி கெளடா - நஞ்சேகெளடா என்பதும் பொய். பொய்யான இந்துத்துவத்தை உண்மையால் வீழ்த்த முடியும். உண்மை அனைவருக்கும் பொதுவானது" எனக் கூறியிருந்தார்.
சேத்தனின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக, சேஷாத்ரிபுரம் காவல் நிலையத்தில் பஜ்ரங் தளத்தை சேர்ந்த சிவகுமார் என்பவர் புகார் அளித்தார். இந்து மத உணர்வுகளை புண்படுத்திய நடிகர் சேத்தன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நடிகர் சேத்தன் குமாரை கைது செய்தனர். பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சேத்தன் சிறையில் அடைக்கப்பட்டார்.