தேவனஹள்ளி (கர்நாடகா): மொழிப் போராட்டங்களில் முதன்மை வகிக்கும் தென்னிந்தியாவில், தற்போது மீண்டும் இந்தப் பிரச்னை தலைதூக்கியுள்ளது. தமிழ்நாட்டைப் போல், மொழிப்பற்று கொண்ட கர்நாடகாவில் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர் பலகைகளில் கன்னட மொழியிலே பெயர்கள் இருக்க வேண்டும் என வலியுறுத்தி கன்னட அமைப்பான கர்நாடக ரக்ஷனா வேதிகே இன்று (டிச.27) போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
முன்னதாக காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில், மாநிலத்தில் உள்ள வர்த்தகங்கள், கடைகளின் பெயர் பலகைகளில் 60 சதவீதம் கன்னட மொழிகளால் மட்டுமே நிரம்பியிருக்க வேண்டும் என உத்தரவு ஒன்று பிறபிக்கப்பட்டது. மேலும், இதனை மாற்றுவதற்காக பிப்ரவரி 28ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், கன்னட அமைப்பான கர்நாடக ரக்ஷனா வேதிகே (KaRaVe), அதன் பெரும் ஆதரவாளர்களுடன் நகரத்தின் பிரதாண பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டது. அந்த அமைப்பின் மாநிலத் தலைவரான நாராயண கவுடா தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டம், தேவனஹள்ளியின் சாதஹள்ளி சுங்கச்சாவடியில் இருந்து, பெங்களூரு கப்பன் பூங்கா (cuppon park) வரை முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் பங்கேற்ற கர்நாடக ரக்ஷனா வேதிகே அமைப்பைச் சேர்ந்த சிலர், போராட்டத்தின்போது ஆங்கிலப் பெயர் கொண்ட நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை அடித்து உடைத்து சேதத்தை ஏற்படுத்தினர். பிரபல புலூம் உணவகத்திற்கு அருகிலிருந்த மின்விளக்குகள் கொண்ட பெயர்ப் பலகை அடித்து உடைக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு முன்னதாக, சாதஹள்ளி சுங்கச்சாவடியில் பாதுகாப்பிற்காக டிசிபி லக்ஷ்மிபிரசாத் தலைமையில் ஒரு ஏசிபி, 6 காவல் ஆய்வாளர் மற்றும் 12 உதவி காவல் ஆய்வாளர்களின் கீழ் நூற்றுக்கும் மேற்ப்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டத்தின்போது பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியதற்கும், மாநிலத்தில் வெடித்திருக்கும் போராட்டச் சூழலை தணிக்கவும், கர்நாடக ரக்ஷனா வேதிகே மாநிலத் தலைவரான நாராயண கவுடா கைது செய்யப்பட்டு, கப்பன் பூங்கா காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டார்.
இது குறித்து கர்நாடக ரக்ஷனா வேதிகே மாநிலத் தலைவரான நாராயண கவுடா கூறுகையில், “முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரிடம் முறையாக அனுமதி பெற்ற பின்னர்தான் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. மேலும், மாநிலத்தின் அமைதி கருதி சுமூகமான முறையிலே முன்னெடுக்கப்பட்டது. காவல் துறையில் 100 சதவீதம் காவலர்கள் கன்னட மொழியை தாய்மொழியாகக் கொண்டவரகள். ஆனால், வெளிமாநிலங்களைப் பூர்விகமாகக் கொண்ட உயர் அதிகாரிகளின் அழுத்தத்தால் எங்களை அடக்க முயல்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, மாநிலத்தின் BBMP-இன் தலைமை ஆணையர் துஷார் கிரிநாத் கூறுகையில், "நிறுவனங்களின் பெயர் பலகை மாற்றம் குறித்த மாநில அரசின் உத்தரவுப்படி, பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும். இந்த வேளையில், தற்போது நிலவி வரும் போராட்டத்தைத் தடுக்க காவல்துறையால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அந்த வகையில், பெங்களூருவின் பிரதான பகுதிகளான விமான நிலைய சாலையில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்காக 4 பேருந்துகள் முன்னேற்பாடு செய்யப்பட்டது" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "இது சம்பந்தமாக அனைத்து மண்டல ஆணையர்களுடன் ஆலோசனைக் கூட்டம் அமைக்கப்பட்டு, பின்னர் மாநிலத்திலுள்ள அனைத்து கடைகள், நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:கோத்தகிரியில் பழங்குடியின மக்களுடன் நடனமாடிய ஓபிஎஸ்!