பெங்களூரு : கர்நாடகவில் வாக்காளர்கள் குறித்த தகவல்கள் திருடப்பட்டு அதை விற்பனை செய்யும் சம்பவம் அரங்கேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடக சட்டப் பேரவை தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மாநிலத்தில் வாக்காளர்களின் தகவல்கள் குறித்த திருட்டு அரங்கேறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து ஒரு நிறுவனத்தை போலீசார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் அந்த நிறுவனத்தின் பெயர் உள்ளிட்ட அடையாளங்கள் குறித்து போலீசார் தகவல் வெளியிடவில்லை.
அந்ததந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் 25 ஆயிரம் ரூபாய் வழங்கினால், வாக்காளர்கள் குறித்த தகவல்களை அந்நிறுவனம் வழங்குவதாக கூறப்படுகிறது. வாக்காளரின் பெயர், முகவரி, எந்த வகுப்பைச் சேர்ந்தவர், கடந்த முறை எந்த கட்சிக்கு வாக்களித்து உள்ளார் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் நிறுவனம் வழங்குவதாக கூறப்படுகிறது.
அந்த நிறுவனம் குறித்து கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புகார் கூறப்பட்ட நிறுவனம் மற்றும் அதன் இணையதள பக்கத்தை முடக்கி கர்நாடக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், வாக்காளர்களின் அனைத்து விதமான தகவல்களையும் சேகரித்த நிறுவனம், அதற்காக தனிப்பட்ட முறையில் பிரத்யேக செயலியை உருவாக்கி அதில் தகவல்களை சேமித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்காளர்களின் பெயர், முகவரி, அவர்களின் சாதி, கடந்த தேர்தலின் போது அவர்கள் யாருக்கு வாக்களித்தனர், இந்த முறை எந்த கட்சிக்கு ஆதரவு அளிக்கின்றனர் உள்ளிட்ட வாக்காளர்களின் அனைத்து தகவல்களும் செயலியில் பதிவிடப்பட்டு இருந்ததாக கூறப்பட்டு உள்ளது.
நிறுவனம் தனது இணையதள பக்கத்தில் வாக்காளர்களின் மொபைல் எண்ணை வெளியிட்டதாகவும், 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் பயனர் கணக்கு வழங்கி அதன் மூலம் சுமார் 6 லட்சம் வாக்காளர்களின் தகவல்களை வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர். குறிப்பிட்ட தொகுதி வாக்காளர் பட்டியல் மட்டும் வெளியிடப்படுகிறதா அல்லது வேறு தொகுதியின் தகவல்களும் கசியவிடப்படுகிறதா என விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்சிகளின் வேட்பாளர்களை குறிவைத்து இயங்கி வரும் இந்த நிறுவனம் அவர்களுக்கு குறுந்தகவல் அனுப்பி அதன் மூலம் வாக்காளர்களின் அடையாளங்களை விற்று வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு சட்டவிரோதமாக வாக்காளார்களின் ரகசியங்களை திருடி சேகரித்ததாக சில்லுமே என்ற கல்வி நிறுவனத்தின் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :நேபாளத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!