பெங்களூரு : கர்நாடகாவில் அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்த அறிவிப்பு மாலை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் கடந்த மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. நேற்று (மே. 13) தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் 135 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
காங்கிரஸ் கட்சியில் அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதற்காக வெற்றி பெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பெங்களூருவில் முகாமிட்டு உள்ளனர். அடுத்த முதலமைச்சருக்கான ரேஸில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே. சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தனது தந்தை தான் அடுத்த முதலமைச்சராக பதவியேற்பார் என சித்தராமையாவின் மகன் யதிந்திரா தெரிவித்து இருந்தார். இது டி.கே. சிவகுமார் ஆதரவாளர்களிடையே கூடுதல் சலசலப்பை ஏற்படுத்தியது. சித்தராமையா முதலமைச்சராக வேண்டுமென்று அவரது ஆதரவாளர்களும், மறுபுறம் டி.கே. சிவகுமார் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட வேண்டுமென அவரது ஆதரவாளர்களும் மாநிலம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (மே. 14) மாலை அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பெங்களூருவில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் மாலை 6 மணிக்கு மாநில மற்றும் தேசிய அளவிலான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே. சிவகுமார் போக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் பிரசாரக்குழு தலைவர் எம்.பி. பாடீல், தேர்தல் அறிக்கை குழு தலைவர் ஜி. பரமேஸ்வர், மூத்த எம்.எல்.ஏக்கள் ஆர்.வி. தேஷ்பாண்டே, எச்.கே. பாடீல், முன்னாள் காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், மூத்த லிங்காயத் சமூக தலைவர் சாமனூர் சிவசங்கரப்பா ஆகியோரும் முதலமைச்சர் வேட்பாளர் ரேஸில் உள்ளதாக கூறப்படுகிறது.