பெங்களூரு:கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கோபிமஞ்சூரியன் சாப்பிட மறுத்ததால் மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தரப்பில், கர்நாடகா மாநிலம் ஷிமோகாவை சேர்ந்த சசிகலா (46), அவரது மகன் சஞ்சய் (26) இருவரும் பெங்களூருவில் உள்ள சசிகலாவின் தாயார் சாந்தகுமாரி (69) வீட்டுக்கு 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்றுள்ளனர். அப்போது, சஞ்சய் தனது பாட்டி சாந்தகுமாரியிடம் கோபி மஞ்சூரியன் கொடுத்து சாப்பிடுமாறு வற்புறுத்தியுள்ளான். ஆனால், சாந்தகுமாரி மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய் கையில் வைத்திருந்த பாத்திரத்தால் சாந்தகுமாரியின் தலை மீது ஓங்கி அடித்துள்ளான். இதன்காரணமாக சாந்தகுமாரிக்கு பலத்த காயம் ஏற்பட்டு சில நிமிடங்களில் உயிரிழந்தார். இதைக்கண்ட சஞ்சயின் தாய் சசிகலா முதலில் போலீசாரிடம் தெரிவிக்க முடிவு செய்தார். ஆனால், மகன் கெஞ்சவே வேறு திட்டம் தீட்டினார். அதன்படி கும்பலகோடியில் வசிக்கும் தனது நண்பர் நந்தீஷுக்கு போன் செய்து நேரில் வரவழத்தார். அவருடன் சேர்ந்து அதே வீட்டில் குழி தோண்டி புதைத்துவிட்டு சிமெண்டால் மூடினார்.