தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மின்கட்டணம் ரூ.1 லட்சமா! கூரை வீட்டில் வாழும் மூதாட்டிக்கு ஷாக் கொடுத்த மின்வாரியம்! - Karnataka Free Current

ஜூலை மாதம் முதல் கர்நாடகாவில் இலவச மின்சார திட்டம் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், கொப்பல் மாவட்டத்தை சேர்ந்த முதாட்டிக்கு 1 லட்ச ரூபாய் மின் கட்டணம் செலுத்தக் கோரி ரசீது வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Old woman
Old woman

By

Published : Jun 22, 2023, 7:38 PM IST

கொப்பலா : கர்நாடகாவில் 1 லட்ச ரூபாய் மின் கட்டணம் செலுத்தக் கோரி ரசீது கொடுக்கப்பட்டதால் மூதாட்டி அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் பாக்கியநகர் பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி கிரிஜாம்மா. பாக்கியநகர் பகுதியில் சிறிய கூரை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், கிரிஜிம்மாவுக்கு மின் கட்டணமாக 1 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் செலுத்தக் கோரி மின்வாரிய ஊழியர்கள் ரசீது கொடுத்து உள்ளனர்.

கூரை வீட்டில் வசித்து வரும் தனக்கு ஒரு லட்ச ரூபாய் மின் கட்டணம் செலுத்தக் கோரி ரசீது வழங்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த கிரிஜிம்மா இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டு உள்ளார். மேலும் தன் வீட்டில் இரண்டு விளக்குகள் மட்டும் பொருத்தப்பட்டு உள்ளதாகவும், மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட எந்த மின்சாதன பொருட்களும் கிடையாது என கிரிஜாம்மா தெரிவித்து உள்ளார்.

மேலும், பாக்கிய ஜோதி யோஜனா திட்டத்தின் மூலம் தான் மின்சாரம் பெற்று வருவதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன் வரை மாதந்தோறும் 70 முதல் 80 ரூபாய் வரை மட்டுமே மின் கட்டணம் வந்ததாகவும், அண்மையில் மின்வாரிய ஊழியர்கள் தன் வீட்டில் புதிய மின் மீட்டர் பொருத்தியது முதல் மின் கட்டணம் அதிகரித்து காணப்படுவதாகவும் கிரிஜாம்மா தெரிவித்து உள்ளார்.

இது குறித்து கிரிஜாம்மா வீட்டை சோதனையிட்ட மின்வாரிய அதிகாரிகள் அவர் கூறியது உண்மை என தெரிவித்து உள்ளனர். இது குறித்து பேசிய மின்வாரிய பொறியாளர் ராஜேஷ், மூதாட்டி கிரிஜாம்மா வீட்டில் எந்த வித மின்சாதன பொருட்களும் இல்லை என்பது தெரியவந்ததாகவும், ரசீது கொடுப்பவர் மற்றும் மின் வாரிய ஊழியரின் அஜாக்கிரதையால் இந்த தவறு நடந்து இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

அஜாக்கிரதையாக செயல்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் மூதாட்டியின் மின் கட்டணம் மறுவறையறை செய்யப்பட்டு மீண்டும் புதிய மின் கட்டணம் வழங்கப்படும் என்று கூறினார். பாக்கிய ஜோதி யோஜானா திட்டம் கடந்த பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.

வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் 40 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது. 40 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு அதற்கு ஏற்றார் போல் மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்து உள்ளது. கடந்த மாதம் கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி அனைத்து குடும்பதாரர்களுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக அறிவித்தது.

மேலும், இந்த திட்டம் மூலம் பொது மக்கள் பயன் பெற கடந்த ஜூன் 18ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் சமர்பிக்க கோரி மாநில அரசு அறிவித்து உள்ளது. ஜூலை மாதம் முதல் 200 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் தக்சின கன்னடா மாவட்டத்தை சேர்ந்த சதாசிவ ஆசார்யா என்பவருக்கு 7 லட்ச ரூபாய் மின் கட்டணம் செலுத்தக் கோரி ரசீது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :Artemis Accords : நிலவு ஆராய்ச்சியில் இஸ்ரோ - நாசா கூட்டணி? வெள்ளை மாளிகை சூசகம்!

ABOUT THE AUTHOR

...view details