பெங்களூரு: கர்நாடகா சட்டப்பேரவை 224 தொகுதிகளைக் கொண்டது. இதற்கு இன்று (மே.10) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டப் பல்வேறு தரப்பினரும் தங்களது தொகுதிகளில் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
'உத்தமவில்லன், சதிலீலாவதி, பஞ்ச தந்திரம்' உட்பட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ள நடிகர் ரமேஷ் அரவிந்த் தனது மனைவி அர்ச்சனாவுடன் பனசங்கரி பிஎன்எம் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார்.
சமீபத்தில் தமிழில் வெளியான 'கப்ஜா' படத்தின் நாயகன் நடிகர் உபேந்திரா கத்ரிகுப்பேயில் உள்ள பிடிஎல் வித்யாவாணி பள்ளியில் வாக்களித்தார். வாக்களிக்கும் முன் பேசிய அவர், ''கர்நாடகாவின் எதிர்காலம், நாட்டின் எதிர்காலம், நமது எதிர்காலம், நம் குழந்தைகளின் எதிர்காலம் என்று பேசுவதை விட, அனைவரின் எதிர்காலமும் முக்கியம்'' என்றார். ''ஜனநாயகத்தின் மிக முக்கியமான நாள். அனைவரும் வந்து வாக்களியுங்கள்'' எனத் தெரிவித்திருந்தார்.
புனித் ராஜ்குமார் குடும்பத்தினர் ராகவேந்திரா ராஜ்குமார், அஸ்வினி புனித் ராஜ்குமார், யுவ ராஜ்குமார் ஆகியோர் சதாசிவநகர் பூர்ணபிரக்யா பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகவேந்திர ராஜ்குமார், தனது சகோதரர் புனித்தை நினைத்து உணர்ச்சிவசப்பட்டார்.