வயநாடு :கடந்த சில நாட்களாக நாட்டில் கரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. அதேநேரம் கேரளாவில் அதிகபட்சமாக கரோனா பதிவு கண்டறியப்படுவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது. நாட்டில் ஒட்டுமொத்தமாக கண்டறியப்படும் கரோனா பதிவில் 90 சதவீதம் கேரளாவில் மட்டும் பதிவாவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்து இருந்தது.
திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் கரோனா கண்டறியப்படுவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பரவல் அதிகரிப்பை தொடர்ந்து கேரளாவில் பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கேரளாவில் புதிதாக 126 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது. கேரளாவில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அங்கிருந்து வரும் பயணிகளுக்கு கர்நாடக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.
இரு மாநில எல்லையான வயநாடு பகுதியில் சோதனைச் சாவடி அமைத்து கர்நாடக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. கேரளாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோரின் தட்பவெப்ப நிலையை பரிசோதித்த பின்னர் அனுமதிக்குமாறு மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
அப்படி வரும் பயனிகளுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் தட்பவெப்ப நிலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் கரோனா பரிசோதனை மேற்கொண்டு அதில் நெகட்டிவ் வரும் பட்சத்திலேயே அனுமதிப்படுவர் என கர்நாடக அரசு தெரிவித்து உள்ளது. கடந்த திங்கட்கிழமை (டிச. 18) பொது இடங்களில் மக்கள் முகக் கவசம் அணிவது கட்டாயம் என கர்நாடக அரசு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
60 வயதிற்கு மேற்பட்டவர்கள், இருதய நோய் உள்ளிட்ட இணை நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அரசு அறிவித்தது. சபரிமலையில் தற்போது சீசன் களைகட்ட தொடங்கி உள்ள நிலையில், அங்கு சென்று திரும்பும் பக்தர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கு என தனியாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படாத நிலையில், பயணிகள் அரசின் அறிவுறுத்தலை ஏற்று முக கவசம் அணிவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கர்நாடக சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின் படி கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 300 பேருக்கு புதிதாக கரோனா பரவி இருப்பது கண்டறிப்பட்டு உள்ளது. மேலும், கடந்த ஒரு நாளில் கேரளாவில் கரோனா தொற்றுக்கு 3 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது நாடு முழுவதும் 2 ஆயிரத்து 341 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க :நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி - கர்நாடகா டெக்கி கைது! திடீர் ட்விஸ்ட் கொடுத்த போலீசார்! என்ன நடந்தது?