மைசூர் :கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளரின் உறவினர் வீட்டில் மரத்தில் பணம் காய்த்த சம்பவம் வருமான வரித்துறை அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டமன்றத்திற்கு வரும் மே மாதம் 10ஆம் தேதி, ஒரே கட்டமாக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு கர்நாடகத் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. சட்டமன்றத்தேர்தலுக்கு ஒரு வார காலம் மட்டும் உள்ள நிலையில் ஆட்சியைத் தக்கவைக்க முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜகவும், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் மும்முரம் காட்டி வருகின்றன.
பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட இருபெரும் கட்சிகளும் தங்களது தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த நிலையில், ஓட்டுக்குப் பணம் கொடுப்பதாக கூறப்படுகிறது. ஓட்டுக்குப் பணம், பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தவிர்க்க தேர்தல் அலுவலர்கள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மைசூரை சேர்ந்த கே சுப்ரமண்ய ராய் என்பவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சட்டவிரோதப் பணம் தொடர்பாக கிடைத்தப் புகாரில் சோதனை நடத்தியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுப்ரமண்ய ராயின் வீட்டில் சோதனை மேற்கொண்ட வருமான வரித் துறை அதிகாரிகள், வீட்டுத்தோட்டத்தில் மரத்தின் அருகில் அலங்கரிக்கப்பட்ட கிளை போன்ற ஒன்றைப் பிரித்து சோதனையிட்டு உள்ளனர்.