டெல்லி: கல்வி நிலையங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்து, கடந்த 2022ஆம் ஆண்டு கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மாணவிகள் போராட்டங்களை நடத்தினர். கர்நாடக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், கர்நாடக அரசின் ஹிஜாப் தடை உத்தரவு செல்லும் என தீர்ப்பு வந்தது.
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதேபோல் சில ஆர்வலர்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது.
இதையடுத்து கடந்த மாதம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதால், வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார்.
இந்த மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மார்ச் 9ஆம் தேதி முதல் கர்நாடகாவில் பியூசி இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. இந்த நிலையில், அரசு பியூ கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து பொதுத்தேர்வு எழுத அனுமதி கோரி, இஸ்லாமிய மாணவிகள் சிலர் உச்சநீதிமன்றத்தில் இன்று(பிப்.22) மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
மாணவிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "பொதுத்தேர்வு நெருங்குவதால் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும். அதேபோல், ஹிஜாப் அணிய அனுமதிக்காததால், அரசுக் கல்லூரிகளில் இருந்து சில மாணவிகள் தனியார் கல்லூரிகளுக்கு சென்றுவிட்டனர். தற்போது அவர்கள் படித்த கல்லூரிகளிலேயே தேர்வு எழுத வேண்டிய நிலை உள்ளது. அவர்களையும் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்" என்று கோரினார்.
அப்போது நீதிபதிகள், மாணவிகள் முகத்தை மறைத்தபடி முக்காடு அணிந்தால், தேர்வறைக்குள் அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர். இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டால், மனுவை வரும் 24 அல்லது 27ஆம் தேதியன்று பட்டியலிடுவது குறித்து பரிசீலிக்கலாம் என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு சிறுவன் தெருநாய்களால் தாக்கப்பட்டான்!