பெங்களூரு : சொத்துகுவிப்பு வழக்கில் சிபிஐயின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரிய கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரின் மனுவை தள்ளுபடி செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.
கர்நாடக காங்கிரஸ் தலைவரும், மாநில துணை முதல்மைச்சருமான டி.கே. சிவக்குமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் கணக்கில் வராத 74 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளின ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டன. இது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்த நிலையில், 2020 ஆம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
அதன்பேரில் டி.கே.சிவக்குமார் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் தன் மீதான சிபிஐயின் விசாரணை சட்டவிரோதமானது என்றும் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் டி.கே.சிவக்குமார் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.