பெங்களூரு : ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையின் வீடியோவில் கேஜிஎப் -2 படத்தின் பாடலை பின்னணியாக பயன்படுத்தியது தொடர்பாக ராகுல் உள்பட 3 பேர் மீது பதிவு செய்யப்பட்ட காப்புரிமை மீறல் வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு கர்நாடக உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ஜனவரி 30ஆம் தேதி ஸ்ரீநகரில் முடிவடைந்தது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்ட ராகுல் காந்தி, கடைசியாக ஜம்மு காஷ்மீர் பயணத்தை நிறைவு செய்தார்.
தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி, ஜனவரி 30ஆம் தேதி ஸ்ரீநகரில் தேசியக் கொடி ஏற்றிவைத்து இந்திய ஒற்றுமை யாத்திரையை நிறைவுக்குக் கொண்டு வந்தார். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு ஆயிரக்கணக்கிலான மக்கள் ஆதரவு அளித்தனர்.
அவரது யாத்திரையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குடும்பத்தோடு கலந்து கொண்டார். மேலும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் மெஹபூபா முப்தி, அவரது மகள் இல்திஜா முப்தி, முப்தி முகமதி சயீத், அசோக் கெலாட், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையின் வீடியோக்களை காங்கிரஸ் கட்சி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதில் ஒரு வீடியோவில் கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தில் உள்ள பாடல் பின்னணியாக வெளியிடப்பட்டது.