பெங்களூரு: இந்திய ரயில்வே வழங்கும் ஓய்வூதியத்தை இந்திய ரயில்வே சேவை விதிகளின்படி, ரயில்வே ஊழியர்களின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மனைவிகளின் குடும்பமும் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் எனவும் ஆகவே, உயிரிழந்த ரயில்வே ஊழியரின் மனைவி குடும்பத்திற்கு ஓய்வூதியத்தை சமமாக பகிர்ந்து அளிக்க வேண்டும் என கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல் மனைவி மற்றும் அவரது மகள்களுக்கு 50% குடும்ப ஓய்வூதியம் வழங்க தென்மேற்கு ரயில்வேக்கு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே ஊழியரின் இரண்டாவது மனைவியின் மனு மீதான விசாரணையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி எம்.நாகபிரசன்னா தலைமையிலான அமர்வு முன்பு இன்று (டிச.22) விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, ஒரு ஊழியர் அல்லது அவரது குடும்பத்தினரின் உரிமைகள் ஓய்வூதிய விதிகளைப் பொறுத்தது என்றும் இந்த விதிகளை பின்பற்றியே ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனவும் கூறினார்.
ஓய்வூதியத்திற்கான ரயில்வே சேவைகள் விதிகள் 1993, 2016-ல் விதிகள் திருத்தப்பட்டு ரயில்வே விதிகள் அமலுக்கு வந்தன. இதன்படி, விதியில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விதவைகள் குடும்ப ஓய்வூதியத்தை பெறுவதற்கு வெளிப்படையாக உரிமை உண்டு. இதன்மூலம், உயிரிழந்த பணியாளரின் மனைவிகளுக்கு சமமாக ஓய்வூதியம் விநியோகிக்கப்படுகிறது.
இது தொடர்பான மனுவில், ரயில்வே ஊழியருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் இருக்கும்போது இது பொருந்தும். ஒருவேளை, இரண்டாவது மனைவி இருக்கும்பட்சத்தில், அவருக்கு 50% ஓய்வூதியம் கிடைக்கும் என நீதிபதி கூறினார். மேலும், முதல் மனைவி மற்றும் அவரது இரண்டு மகள்களுக்கு 50% ஓய்வூதியம் வழங்குமாறு பெங்களூரு குடும்பநல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் உயர்நீதிமன்றம் தலையிட தேவையில்லை என நீதிபதி தெரிவித்தார்.
வழக்கின் பின்னணி என்ன?: இவ்வழக்கில், ஆர்.ரமேஷ்பாபு என்பவர் தென்மேற்கு ரயில்வேயின் முதுநிலைப் பிரிவு பணியாளர் மேலாளர் அலுவலகத்தில் போக்குவரத்துப் பிரிவில் புள்ளியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு இரண்டு திருமணங்கள் ஆகிய நிலையில், முதல் மனைவிக்கு மூன்று மகள்களும், இரண்டாவது மனைவியான திருப்பதியை சேர்ந்த புஷ்பாவிற்கு 22 வயதில் ஒரு மகள் உள்ளார்.