பெங்களூரு : கர்நாடகாவில் தேவையான அளவுக்கு அரிசி கொள்முதல் மற்றும் விநியோகம் உறுதி செய்யப்படும் வரை ரேஷன் கடைகளில் அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் வழங்கும் 5 கிலோ அரிசிக்கு பதிலாக பணம் வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இந்திய உணவுக் கழகத்தின் தர நிர்ணயத்தின் படி ஒரு கிலோ அரிசிக்கு 34 ரூபாய் வீதம் 5 கிலோ அரிசிக்கு 170 ரூபாய் வழங்கப்படும் என உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் கே.எச். முனியப்பா தெரிவித்து உள்ளார்.
முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தலைமையில் கர்நாடக அமைச்சரவை கூடிய நிலையில், இந்த முடிஒவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மத்திய அரசு வழங்கும் இலவச அரிசி திட்டத்துடன் சேர்த்து அன்ன பாக்யா திட்டத்தில் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது.
இந்நிலையில், மாநிலத்தில் போதிய அளவுக்கு அரிசி கொள்முதல் மற்றும் விநியோக பணிகள் தடைபட்டு உள்ள நிலையில், அன்ன பாக்யா திட்டத்தில் அரிசிக்கு பதிலாக பணம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் கே.எச். முனியப்பா, "ஜூலை 1ஆம் தேதி முதல் அன்ன பாக்யா திட்டத்தில் அரிசிக்கு பதிலாக பணம் வழங்கப்படுவது அமல்படுத்தப்பட உள்ளது.
ஆட்சிக்கு வந்தவுடன் அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த நிலையில், அரசி கொள்முதல் தட்டுப்பாடு காரணமாக ஒரு ரேஷன் கார்டுக்கு 5 கிலோ அரிசியும் மீதமுள்ள 5 கிலோ அரிசிக்குப் பதிலாக பணமும் வழங்கப்பட உள்ளது.