பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூருவில், நாட்டின் அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய முதலமைச்சர் பசவராஜ், “தேசிய அளவில் பாஜகவின் முக்கிய அறிக்கையின் ஒரு பகுதியாக யுசிசியை அமல்படுத்துவது குறித்து தனது அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
சமத்துவத்தை உறுதி செய்வதற்காக இந்த பொது சிவில் சட்டம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. யுசிசியை செயல்படுத்துவதற்கு பல மாநிலங்களில் அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்களை மாநில அரசு கவனித்து வருகிறது” என கூறினார்.
மேலும் நேற்று (நவ 25) சிவமொக்காவில் பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, “தீன்தயாள் உபாத்யாய் காலத்திலிருந்தே நாங்கள் ஒரே மாதிரியான சிவில் சட்டம் பற்றி பேசி வருகிறோம். நாடு மற்றும் மாநில அளவில் தீவிர சிந்தனை நடத்தப்பட்டு வருகிறது.
சரியான நேரம் வரும்போது அதைச் செயல்படுத்தும் எண்ணமும் இருக்கிறது. மக்கள் நலனை சாத்தியமாக்கவும் மற்றும் சமத்துவத்தை கொண்டு வரவும் முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இதை செயல்படுத்த அனைத்து வலுவான நடவடிக்கைகளையும் எடுப்போம் என்பதை நான் மிகத் தெளிவாகக் கூற விரும்புகிறேன்.
இப்போது கட்டாய மதமாற்றம் குற்றம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநிலத்தில் உள்ள கோயில்களை பக்தர்கள் நிர்வகிக்க வேண்டும் என்று தனது கட்சி உறுதியாக நம்புகிறது. வரும் நாட்களில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். மகாராஷ்டிரா அரசிடம் ஏற்கனவே பேசியுள்ளேன்.
இன்று உள்துறை அமைச்சர் மற்றும் டிஜி, ஐஜி ஆகியோர் மூத்த அலுவலர்களுடன் பேசுவார்கள். எங்களின் பேருந்துகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது. இரு மாநிலங்களுக்கும் இடையே அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க:கர்நாடகா-மகாராஷ்டிரா எல்லை விவகாரம்... பேருந்து சேவைகள் நிறுத்தம்...