பெங்களூரு: பெங்களூருவில் கனமழை தொடர்ந்து பெரும் பாதிப்பை உருவாக்கி வருவதால், நகரின் வெள்ளச்சூழலை சமாளிக்க 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில், பெங்களூருவில் ஏற்பட்டுள்ள மழை மற்றும் வெள்ளப்பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய, நேற்று இரவு மூத்த அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களுடன் முதலமைச்சர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறுகையில், ”மாநிலம் முழுவதும் மழை மற்றும் வெள்ளச் சூழலை சமாளிக்க ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டது. சாலைகள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள், பள்ளிகள் போன்ற சேதமடைந்த உள்கட்டமைப்புகளை மீட்க பெங்களூருவுக்கு மட்டும் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்புகளை உருவாக்க தனித்தனியாக ரூ.500 கோடி ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டிருந்தது. பெங்களூருவில் மழைநீர் வடிகால் அமைக்க மொத்தம் ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் குறைந்தவுடன் பணிகள் தொடங்கும்.