கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த தேர்தலில், தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்றனர்.
முதல் நாளிலேயே காங்கிரஸ் கட்சியின் முக்கியமான ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் உரிமைத் தொகை, மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம், மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மாதம் 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3,000 ரூபாய் - டிப்ளமா படித்தவர்களுக்கு 1,500 ரூபாய் உதவித் தொகை ஆகிய ஐந்து வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் சித்தராமையா அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, ஐந்து வாக்குறுதிகளும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்தவகையில், மாதம்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கர்நாடகாவில் அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கும் 'சக்தி திட்டம்' (Karnataka Govt Launches Shakti Scheme for Women Free bus service) இன்று (ஜூன் 11) தொடங்கப்பட்டது. பெங்களூரில் உள்ள அம்மாநில தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இருவரும் கொடியசைத்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர். அதன் பின்னர், இருவரும் இந்த திட்டத்தில் முதல்முறையாக பேருந்தில் ஏறி பயணம் செய்யவிருந்த பெண்களிடம் பேசினர். பிறகு, இலவச பயணத்திற்கான பயணச்சீட்டுகளை மகளிருக்கு வழங்கினர்.