டெல்லி:காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு கடந்த 10ஆம் தேதி கர்நாடகாவில் இருந்து 15 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்த நிலையில், இதனை பலத் தரப்பினரும் வெகுவாக வரவேற்றனர்.
இதனைத்தொடர்ந்து, சில தினங்களிலேயே 10 கனஅடி நீராக குறைத்தது அம்மாநில அரசு. தமிழ்நாடு அரசு இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது குறித்த மனுவில், 'ஆகஸ்ட் மாதத்திற்கான மீதமுள்ள நாட்களுக்கான தேவையான 24 ஆயிரம் கன அடி நீரை உடனடியாக திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல, செப்டம்பர் மாதம் திறக்க வேண்டிய 36.76 டிம்எம்சி நீரை திறப்பதை அம்மாநில அரசு உறுதி செய்யவேண்டும், எஞ்சியுள்ள காலங்களுக்கும் தமிழ்நாட்டுக்கு மாதந்தோறும் நீரை திறந்துவிடுவது குறித்த உத்தரவுகளை முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த மனுவை கடந்த ஆக.22-ல் அவசர மனுவாக விசாரிக்க கோரிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, தமிழ்நாடு அரசின் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்றார். இது தொடர்பான மனுக்களை அப்போது விசாரித்த நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் ஓய்வுபெற்றதால் இம்மனுக்களை விசாரிக்க புதிய அமர்வை ஏற்படுத்த வேண்டும் என்று முறையிட்டார். இந்த முறையீட்ட ஏற்ற தலைமை நீதிபதி, புதிய அமர்வு அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இவரைத்தொடர்ந்து கர்நாடகா தரப்பில் ஆஜராகிய அரசு மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், 'மேகதாது விவகாரம் (Megathathu issue) தொடர்பாக, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் அவசரமாக விசாரிக்க வேண்டும் என அவர் முறையிட்டார். இந்த நிலையில், அமைக்கப்பட உள்ள புதிய அமர்வு இந்த மனுவையும் சேர்த்து விசாரிக்கும் என தலைமை நீதிபதி கூறினார்.