பெங்களூரு : கர்நாடக சட்டப் பேரவை தேர்தல் நெருங்கிய நிலையில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாருக்கு எதிராக கட்சி மேலிடத்திற்கு தான் கடிதம் எழுதியதாகக் கூறி, பாஜக சதிச் செயலில் ஈடுபட்டு உள்ளது என முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப் பேரவைக்கு ஒரே கட்டமாக மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கர்நாடகாவில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதேபோல் காங்கிரஸ் சார்பில் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஒரு மாதமாக நடந்த அனல் பறக்கும் தேர்தல் பிரசாரங்கள் ஓய்ந்த நிலையில், தற்போது கர்நாடகமே நிசப்த அலையில் நிழலாடி வருகிறது. மக்கள் முடிவுகளுக்காக பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் காத்திருக்கின்றன. இந்நிலையில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் குறித்து முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கட்சி மேலிடத்திற்கு எழுதியதாக கடிதம் சமூக வலைதளத்தில் வெளியாகி, வேகமாக பரவி வருகிறது.
இது தொடர்பாக பேசிய முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, 'கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாருக்கு எதிராக கட்சி மேலிடத்திற்கு தான் எழுதியதாக வைரலாகும் கடிதம் பாஜகவின் சதிச் செயல்' எனத் தெரிவித்து உள்ளார்.
மேலும் தேர்தல் தோல்வி பயத்தில் பாஜக இது போன்ற சதிச்செயலில் ஈடுபட்டு உள்ளதாக சித்தராமையா கூறினார். கட்சி மேலிடத்திற்குத் தான் எந்தவொரு கடிதத்தையும் எழுதவில்லை என அவர் தெரிவித்தார். சமூக வலைதளத்தில் பரவும் கடிதம் போலி என்றும்; திட்டம் போட்டு பாஜக அதைப் பரப்பி வருவதாகவும் கூறினார்.