விஜயபுரா:கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியில் ராஜகுரு இண்டஸ்ட்ரீஸ் என்ற மிகப்பெரிய தனியார் உணவு சேமிப்பு கிடங்கு ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கிடங்கில், நேற்று (நவ.4) இரவு ஏற்பட்ட விபத்தில் பணி செய்து கொண்டிருந்த 11 நபர்கள் வரை சிக்கியிருக்கலாம் எனக் கூறப்பட்டது. முதற்கட்டமாக இறந்த 3 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், இறந்த நபர்கள் ராஜேஷ் முகியா (25), ரம்ப்ரீஸ் முகியா (29) மற்றும் ஷம்பு முகியா (26) என அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது 6 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் லுகோ ஜாதவ் (45), ராம் பாலக் (52) ஆகிய இருவரின் உடல் அடையாளம் காணப்பட்டு, மற்றொரு தொழிலாளியின் அடையாளம் காணப்பட்டு வருகிறது. தற்போது மீட்புப்பணி கடைசி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மற்றொரு தொழிலாளியின் சடலம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
அதாவது, கிடங்கில் உணவு பதப்படுத்தும் பிரிவில் வேலை செய்த 11 தொழிலாளர்கள் மீது மக்காச்சோள மூட்டை விழுந்ததாகவும், அதனால் மூட்டைகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்ததாகவும், இதுவரை 7 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் (SDRF) கிடங்கு மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் சிக்கியவர்கள் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்றும், 4 - 5 ஜேசிபிகள் மூலம் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து தொழிற்சாலை விபத்து குறித்து தகவலறிந்த அமைச்சர் எம்.பி.பாட்டீலா மீட்புப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, சம்பவம் குறித்த தகவல்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர், அங்கிருந்த தொழிலாளர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
விபத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும்போது, பீகார் தொழிலாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். முதலில் இழப்பீடு அறிவித்துவிட்டு சடலத்தை எடுத்துச் செல்லுமாறு வழிமறித்து நின்றனர். அப்போது, அவர்களை சமாதானம் செய்த அமைச்சர் நிலைமையையும் தெளிவுபடுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர், “இது மிகவும் கொடுமையான சம்பவம். வேறு மாநிலத்தில் இருந்து இங்கு பணிபுரிய வந்த தொழிலாளர்களுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. நமது முதல் முன்னுரிமை, பாதுகாப்பு. இறந்த தொழிலாளர்களின் உடல்கள் அவர்களது வீட்டிற்கு கொண்டு செல்லும் பணி நடந்து வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் பேசி, அந்த தகவலை கர்நாடக முதலமைச்சருக்கு தெரிவித்துள்ளேன். காயம் அடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். மேலும் தொழிற்சாலையின் உரிமையாளரும் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தற்போது வரை விபத்தில் சிக்கிய 7 தொழிலாளர்களும் இறந்திருக்க வாய்ப்பு உண்டு. தொழிலாளர்கள் மற்றும் இறந்த நபர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலைத் தெரிவிக்கிறேன்.
இதற்கு முன்னர் நிகழ்ந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் இறந்தபோது, இழப்பீடும் தரவில்லை, இறந்தவர்களின் உடலும் தரவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த வழக்கை விசாரிப்போம். தவறு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இறந்த தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்காதபோது, எவ்வளவு செல்வாக்கு படைத்தவர்களாக இருந்தாலும், அரசு மற்றும் ஊடகங்களில் இருந்து தப்ப முடியாது" என தெரிவித்தார்.
கிரேன் மீட்புப்பணி தோல்வி: தொழிற்சாலையில் நடந்த விபத்தில் கடந்த 15 மணி நேரமாக மீட்புப்பணி நடந்து வருகிறது. ஆலையில் கிரேன் மூலம் மூட்டைகளை அகற்றி அதன் அடியில் சிக்கிய தொழிலாளர்களின் உடல்களை மீட்கும் முயற்சி நடந்து வந்தது. தற்போது அந்த முயற்சி தோல்வியடைந்ததால், டிசிடி பூபாலம் மற்றும் எஸ்பி ரிஷிகேஷ் சோனாவனே தலைமையில் ஜேசிபி மூலம் மீட்புப்பணி நடந்து வருகிறது.
இதனிடையே விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் முழு வீச்சில் மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக இறந்த 3 தொழிலாளர்கள் உடல்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 6 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ள ஒருவரின் உடலை தேடும் நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது.
மொத்தம் 11 தொழிலாளர்கள் சிக்கிய நிலையில், கிட்டத்தட்ட அனைவரும் உயிருடன் இருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதில் 3 பேர் காயமின்றி உயிர் தப்பினர், மேலும் ஒருவர் மீட்புப்பணியின் போது மீட்கப்பட்டார். இந்நிலையில், புனேயில் இருந்து வந்த 30க்கும் மேற்பட்ட தேசிய மீட்புப்படை வீரர்கள் விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: படிப்படியாக குறையும் மிக்ஜாங் புயல் தாக்கம்.. சென்னையின் தற்போதைய நிலவரம் என்ன?