பெங்களூரு: கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று (மே 13) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில், தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 124 இடங்களுடன் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து பாஜக 70, மதச்சார்பற்ற ஜனதா தளம் 23, சுயேட்சைகள் 5, கல்யாண ராஜ்ய பிரகதி பாக்ஷா மற்றும் சர்வோதயா கர்நாடகா பாக்ஷா ஆகிய கட்சிகள் தலா 1 இடத்திலும் அடுத்தடுத்து முன்னிலை வகிக்கின்றன.
கர்நாடகாவில் ஆட்சி அமைய 113 இடங்கள் பெரும்பான்மை வேண்டும் என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை உடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால், அக்கட்சியின் தொண்டர்கள் டெல்லி மற்றும் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல், காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் மாநில தலைமையகத்தில் திரண்டு வருகின்றனர். அதேநேரம், பசவராஜ் பொம்மை ஷிகாவோன் தொகுதியில் உள்ள பாஜக முகாம் அலுவலகத்தில் உள்ளார்.
இதனிடையே கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வாழும் தொகுதிகளாக அறியப்படும் ராமநகரம், சாந்தி நகர், புலிகேசி நகர், சர்வஞான நகர், காந்தி நகர், சிவி ராமன் நகர், கோலார், கே ஆர் புரா, ராஜாஜி நகர், சிக்பெட், சிவாஜி நகர் மற்றும் கேஜிஎப் ஆகிய தொகுதிகளிலும் பெரும்பான்மையாக காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.
குறிப்பாக, சிவி ராமன் நகர், சிக்பெட், கே.ஆர்.புரா மற்றும் ராஜாஜி நகர் ஆகிய தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. அதேநேரம், கேஜிஎப், புலிகேசி நகர், ராம நகரம், சாந்தி நகர், சர்வஞான நகர் மற்றும் சிவாஜி நகரில் காங்கிரஸ் கட்சியும், கோலார் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளமும் முன்னிலை வகிக்கின்றன.