பெங்களூரு :கர்நாடகாவில் மதியம் 3 மணி நிலவரப்படி 52. 18 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை ஆர்வமாக செலுத்தி வருகின்றனர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டுத் துறை சார்ந்த பிரபலங்களும் தங்களது வாக்குகளை ஆர்வமாக செலுத்தி வருகின்றனர். ஆட்சியைத் தக்கவைக்க பாஜகவும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் தீவிர முனைப்புடன் காத்திருக்கின்றன.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற பொன்மொழிக்கு ஏற்ப 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் காணப்படுகிறது. இதனால், ஆட்சியைத் தக்கவைக்க பாஜக போராடி வருகிறது. மேலும் தென் இந்திய மாநிலங்களில் பாஜகவால் கர்நாடகாவைத் தவிர்த்து வேறெங்கும் காலூன்ற முடியவில்லை என்றே கூறலாம்.
இதனால் தென்னிந்திய மாநிலங்களின் வாசலாக கருதப்படும் கர்நாடகாவில் ஆட்சியை அமைக்க பாஜக மும்முனை திட்டங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல், தென் மாநிலங்களில் தனது கட்சியை பலப்படுத்தவும், 2024ஆம் ஆண்டு பாஜகவுக்கு எதிரான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை வலுப்படுத்தும் திட்டத்திலும் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது.