ஹைதராபாத்: சிபிஐ(CBI) எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குநராக தற்போது சுபோத் குமார் ஜாய்ஸ்வால் பொறுப்பு வகித்து வருகிறார். மகாராஷ்டிராவின் 1985 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ஜாய்ஸ்வால், கடந்த 2021ஆம் ஆண்டு மே 26 அன்று சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டார். சிபிஐ இயக்குநரின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் என்பதால், வருகிற 25ஆம் தேதி உடன் அவரது பதவிக் காலம் முடிவடைய உள்ளது.
இந்த நிலையில், புதிய சிபிஐ இயக்குநரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மக்களவை எதிர்கட்சித் தலைவர்கள் அடங்கிய உயர் மட்டக்குழுவின் பரிந்துரையின் பேரில்தான் சிபிஐ இயக்குநர் நியமனம் செய்யப்படுகிறார். அந்த வகையில், நேற்று (மே 13) பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மக்களவை எதிர்கட்சித் தலைவர்கள் அடங்கிய குழு கூடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதன் அடிப்படையில், 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளை இக்குழு பரிந்துரைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பான ஆதாரங்களின்படி, கர்நாடகா, டெல்லி மற்றும் பிற மாநிலங்களில் இருந்து 3 ஐபிஎஸ் அதிகாரிகளை இக்குழு பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது. முக்கியமாக, கர்நாடகா டிஜிபி பிரவீன் சூட் இந்த பரிந்துரை பட்டியலில் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.