டெல்லி :சிபிஐ இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் சூட் நியமிக்கப்பட்டு உள்ளார். கர்நாடக டிஜிபியாக இருந்த பிரவீன் சூட், மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த இரண்டு ஆண்டுகள் சிபிஐ இயக்குநர் பதவியில் அவர் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக டிஜிபி பிரவீன் சூட்டை சிபிஐ இயக்குநராக நியமித்து மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் தற்போதைய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் பதவி வகிக்கிறார். மகாராஷ்டிர மாநிலத்தின் 1985ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்தவரான, சுபோத் குமார் ஜெய்ஸ்வாலின் பதவிக் காலம் வரும் 25ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதையடுத்து அடுத்த சிபிஐ இயக்குநரை தேர்வு செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டது. அடுத்த சிபிஐ இயக்குநரை தேர்வு செய்யும் குழுவில் அங்கம் வகிக்கும் பிரதமர் மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் 3 பேரின் பெயரை அடுத்த சிபிஐ இயக்குநர் பதவிக்கு பரிந்துரை செய்தனர்.
இதில் கர்நாடக மாநில டிஜிபி பிரவீன் சூட்டை அடுத்த சிபிஐ டிஜிபியாக நியமித்து, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. சிபிஐ இயக்குநரின் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். அதன்படி மே 2025ஆம் ஆண்டு வரை பிரவீன் சூட் சிபிஐ இயக்குநராக நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்ட்டு உள்ளது.