பெங்களூரு : கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி பட்டாசு கடை தீ விபத்தில் கடையின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், மேலும் தலைமறைவான 3 பேரை போலீசார் தேடி வருவதாகவும் கர்நாடக டிஜிபி அலோக் மோகன் தெரிவித்தார்.
தமிழகம் - கர்நாடக எல்லையான பெங்களூரு - ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அத்திப்பள்ளி எல்லையை ஒட்டிய பகுதியில் பாலாஜி கிராக்கர்ஸ் என்ற பட்டாசு கடை இயங்கி வந்தது. இந்த கடையில் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று (அக்.7) மாலை பட்டாசுக் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் கடையில் பணியாற்றிய 14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், அவர்களது உடல்கள் அத்திப்பள்ளியில் உள்ள ஆக்ஸ்போர்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த கோர விபத்தில் 12 பேர் உடல் கருகி சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில், இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்ச ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 1 லட்ச ரூபாயும், லேசான காயங்களுடன் உயிர் தப்பியவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.