கோவிட்-19 இரண்டாம் அலையின் தாக்கம் இந்தியாவில் மூலைமுடுக்கெங்கும் பரவியுள்ளது. முதல் அலையின்போது பெரும்பாலும் நகர்புறங்கள் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் அலையில் கிராமப்புறங்களும் சிக்கித் தவிக்கின்றன.
இதை உணர்த்தும் விதமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மக்கள் ஊரை விட்டு வெளியேறி வயல்வெளிகளில் வசிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் கோப்பல் தாலுக்காவில் உள்ள ஹிரேபொம்மனால் என்ற கிராமத்தில் கரோனா பரவல் அதிகம் காணப்பட்டுகிறது.
இதையடுத்து அங்குள்ள 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஊரைக் காலி செய்துவிட்டு தங்கள் வயல்வெளிகளில் உள்ள குடில்களுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். பெண்கள் சமையல் உள்ளிட்ட வேலைகள் தொடங்கி, சிறுவர்கள் சைக்கிள் விடுவதுவரை அனைத்தும் வயல்களிலேயே அரங்கேறுகிறது.
வயலுக்குள் தஞ்சம் புகுந்த கிராமவாசிகள் இதுகுறித்து அக்கிராமத்தை சேர்ந்த ரத்ததினம்மா என்ற பெண், "கோவிட்-19 பெருந்தொற்றின் மீதான அச்சம் கிராமத்தினருக்கும் ஏற்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையம் கிராமத்திலிருந்தாலும் அங்கு முறையான சிகிச்சை வசதிகள் இல்லை. எனவே நாங்கள் குடும்பத்துடன் வயல்களில் குடியேறிவிட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பசித்தால் எடுத்துக்கொள்: ஆதரவற்றவர்கள் உணவருந்த உதவிய அஜித் ரசிகர்கள்!