பெங்களூரு:முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, வி.கே.சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் உள்ளிட்டோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்திருப்பதாகக் கூறி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படட்து. இதில் 1996 ஆம் ஆண்டு ஜெலலலிதாவிற்கு சொந்தமான விலையுயர்ந்த பொருட்கள், அசையும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது.
பின்னர் இந்த வழக்கு பெங்களூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு வாதம் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு மேல்முறையீட்டில் இருக்கும் போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்து விட்டதால் வழக்கில் இருந்து அவரது பெயர் விடுவிக்கப்பட்டது. பின்னர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேருக்கும் தண்டனை விதிக்கப்பட்டு 2017-ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை ஏலம் விடும்படி பெங்களூருவைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலரான நரசிம்ம மூர்த்தி என்பவர் பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனைத்தொடர்ந்து, பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்ற உத்தரவுப்படி பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட கர்நாடக அரசு சார்பில் கிரண் எஸ்.ஜவாலியா என்பவர் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
அவ்வாறு ஏலம் விடுவதற்கான நடவடிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்டதாக பட்டியிலிடப்பட்ட பல பொருட்கள் நீதிமன்ற கருவூலத்தில் இல்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் எஸ். ஜவாலியா கூறும்போது, 30 கிலோ எடையுள்ள தங்கம், வைரம், மரகதம், ரூபி, முத்துக்கள் போன்ற ஆபரணங்கள் மட்டுமே இருப்பதாகவும், மீதமுள்ள 28 வகையிலான விலை உயர்ந்த பொருட்கள் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஜெயலலிதாவின் 11,344 விலையுர்ந்த புடவைகள், ஏசி, இன்டர்காம் டெலிபோன், சூட்கேஸ், கைக் கடிகாரம், சுவர் கடிகாரம், மின்விசிறி, அலங்கார வேலைபாடுகள் கொண்ட நாற்காலிகள், மேஜை, டீப்பாய் (டீ மேஜை), கட்டில், டிரஸ்ஸிங் டேபிள், அலங்கார விளக்குகள், சோஃபா செட், 750 ஜோடி காலணிகள், உடைமாற்றும் அறையின் கண்ணாடி, வேலைப்பாடுகள் நிறைந்த கண்ணாடி டம்ளர்கள் போன்ற பொருட்கள் மற்றும், இரும்பு லாக்கர்கள், 250 சால்வைகள், குளிர்சாதனப் பெட்டி, பணம், டிவி, விசிஆர் (video cassette recorder), வீடியோ கேமரா, சி.டி.பிளேயர், ஆடியோ டெக், டேப் ரெக்கார்டர், வீடியோ கேசட்ஸ் உள்ளிட்ட பல விலையுயர்ந்த பொருட்களை ஒப்படைக்கும் படி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை வாரிசுகளான தங்களிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்று ஜெ.தீபா, ஜெ.தீபக் இந்த ஆண்டு தொடக்கத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை நிராகரித்த நீதிமன்றம், “குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கூட்டு சேர்ந்து நிறுவனங்களை உருவாக்கி, முறைகேடாக சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து, வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்துள்ளனர் என்பது உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.
இந்த நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் சட்ட விரோதமான முறைகளைக் கடைப்பிடித்து சொத்துக்கள் வாங்கப்பட்டவை என்று தெளிவாகக் கூறும்போது, குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் சட்ட விரோத முறைகளைப் பின்பற்றி கூட்டாகச் சம்பாதித்த சொத்துக்களை இறந்த குற்றவாளியின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு ஆதரவாக விடுவிக்க முடியாது” என நீதிபதி ஹெச்.ஏ.மோகன் தெரிவித்தார்.
மேலும், இந்த வ்ழக்கில் கைப்பற்றப்பட்ட ஜெயலிதாவின் பொருட்கள் விவரத்தை நரசிம்ம மூர்த்திக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதையும் படிங்க: என்னைப் போன்று ராகுல் காந்திக்கும் நீதி கிடைக்கும் - எம்எல்ஏ பழனி நாடார்