கலாபுரகி: கர்நாடக மாநிலம் கலாபுரகி மாவட்டம், கட்டரகி கிராமத்தில் உள்ள அரசு பள்ளி கட்டிடம் முற்றிலும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. மோசமான கட்டிடத்தில் உயிருக்கு பயந்த நிலையிலேயே மாணவர்கள் படித்து வந்தனர். அப்பள்ளி அறநிலையத்துறை வளாகத்தில் இருப்பதால், அங்கு புதிய கட்டிடப் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
இதனால், கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசுப் பள்ளி கட்டுவதற்கு நிலம் வாங்க முடிவு செய்தனர். அதற்காக 'அக்சரா ஜோலிகே' என்ற தன்னார்வ அமைப்பை தொடங்கினர். அந்த அமைப்பின் மூலம் நிதி திரட்ட ஆரம்பித்தனர்.
நன்கொடை வசூலிப்பதற்காக, அங்குள்ள விரக்த மடத்தின் சிவானந்த சுவாமிகள் தலைமையில், கட்டரகியில் 21 நாட்களுக்கு சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தினர். ஏராளமான பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் நன்கொடை வழங்கினர். சுமார் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டது. அதை வைத்து, கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தை வாங்கினர்.