பாரதிய ஜனதா கட்சியில் 75 வயதை நிறைவுசெய்தவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது. ஆனால், எடியூரப்பாவுக்கு 75 வயதைக் கடந்தும் முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. அப்போது, அவரிடம் இரண்டு ஆண்டுகள் கழித்து முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்சித் தலைமை நிபந்தனை விதித்தது. அவரும் அதனை ஏற்றுக்கொண்டார்.
அதன்படி, ஜூலை 26ஆம் தேதியுடன் அவருக்குக் கொடுக்கப்பட்ட இரண்டு ஆண்டு காலம் முடிவடைந்தது. முன்னதாக ஜூலை 16இல் டெல்லி சென்ற அவர் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடன் இது குறித்து விவாதித்தார்.
இதையடுத்து, அவர் கொடுத்த வாக்குறுதியின்படி தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து பசவராஜ் பொம்மை முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார். பின்னர், பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆகியோருடன் பசவராஜ் பொம்மையின் சந்திப்பு நிகழ்ந்தது.