கர்நாடகா: சுவாமி விவேகானந்தர் பெயரில் அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டி காவி வண்ணம் பூச மாநில அரசு முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் 8,000-க்கும் மேற்பட்ட வகுப்பறைகளை கட்ட அரசு முடிவு செய்து, அவற்றுக்கு விவேகா பள்ளி வகுப்பறைகள் என பெயரிட யோசித்துள்ளது.
மாநிலத்தில் கட்டப்பட்டு வரும் 8,000-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி வகுப்பறைக்கு சுவாமி விவேகானந்தரின் பெயரை வைக்கும் எண்ணத்தில் அரசு உள்ளது. ரூ.992 கோடி செலவில் புதிய பள்ளி, கல்லூரி வகுப்பறைகள் கட்டும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு மட்டுமே முதற்கட்டமாக காவி வண்ணம் பூசப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
காவி வண்ணம் உன்னத மதிப்புகள் மற்றும் நல்ல லட்சியங்களின் சின்னமாகும். விவேகானந்தரின் பெயர் கொண்ட அறைகளுக்கு ஏற்ற வண்ணம். இது குழந்தைகளை கவர உதவும் என கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
பாஜக அரசு கல்வித்துறையை காவிமயமாக்குகிறது. சங்பரிவார் தலைவர்களின் வார்த்தைகளுக்கு செவிசாய்த்து கல்வித்துறையை மாற்ற பாஜக முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த விமர்சனத்துக்கு முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, விவேகா பள்ளி திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் பள்ளி வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. காங்கிரஸ் தேவையில்லாமல் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. என்ன முன்னேற்றம் ஏற்பட்டாலும் சர்ச்சையை உருவாக்கவே வேலை செய்கின்றனர்.
விமர்சகர்களுக்கு வளர்ச்சி தேவையில்லை. குழந்தைகளுக்கான பள்ளி அறைகள் கட்டுவதைக்கூட அரசியலாக்குவது சரியல்ல. ஏன் காவியை கண்டு பயப்படுகிறார்கள்? நமது தேசியக் கொடியிலும் காவி நிறம் உள்ளது. விவேகானந்தர் அணிந்திருந்த ஆடைகள் கூட காவி நிறமே. தேவையில்லாமல் காவி நிறத்தை வைத்து விமர்சிப்பது சரியல்ல என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா மரணம்