கர்நாடகாவில் அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு கிரிப்டோகரன்சி, பிட்காயின் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் நிலையில், காங்கிரஸ் - பாஜக தலைவர்களிடையே மோதல் வெடித்துள்ளது.
இந்நிலையில், இன்று (நவ.14) ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு விதான் சவுதாவில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர் பொம்மை செய்தியாளர்களை சந்தித்தார்.
ஊழலை வெளிக்கொண்டுவந்த பாஜக
அப்போது பேசிய அவர், ”இந்த பிட்காயின் மோசடியை நாங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளோம். இந்த வழக்கின் விசாரணையை அமலாக்கத் துறையினரிடமும், மத்திய புலனாய்வுப் பிரிவின் வசமும் ஒப்படைத்துள்ளோம். ஊழலில் ஈடுபட்ட எவரையும் நாங்கள் விடமாட்டோம்" என்றார்.
தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினரை சாடிய அவர், “2018ஆம் ஆண்டு வழக்கின் முக்கியக் குற்றவாளி ஸ்ரீ கிருஷ்ணாவை காங்கிரஸ் விசாரித்திருந்தால், அனைத்தும் வெளிவந்திருக்கும். இந்த ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர்கள் நாங்கள்தான்.
’காங்கிரஸின் அறிவு திவாலாகிவிட்டது’
காங்கிரஸ் தனது ட்வீட்டில் பிட்காயின் குறித்த குற்றச்சாட்டை தான் முன்வைத்தது. 5,000 பிட்காயின்கள் பரிமாற்றம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியது. ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை சுமத்துவது, காங்கிரஸ் அறிவுப்பூர்வமாக திவாலாகிவிட்டதைக் காட்டுகிறது. பதிவு, ஆதாரங்களை வைத்து பின்னர் ட்வீட் செய்யுங்கள்" எனச் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், 2016ஆம் ஆண்டு முதல் இந்த ஊழல் நடந்ததாக காங்கிரஸ் கூறுகிறது. அது உண்மையென்றால், காங்கிரஸ் ஏன் இதில் கவனம் செலுத்தவில்லை? முக்கியக் குற்றவாளி ஸ்ரீ கிருஷ்ணாவை கைது செய்து பின்னர் காங்கிரஸ் விடுவித்தது. இவ்வழக்கு நீண்ட காலமாக வளர அவர்கள்தான் காரணம்.
காங்கிரஸ்காரர்கள் பல பெயர்களை சொல்கிறார்கள். இந்த ஊழலில் இரண்டு செல்வாக்கு மிக்க நபர்கள் ஈடுபட்டிருப்பதாக சொல்பவர்கள் அவர்களின் பெயரை ஏன் வெளியிடவில்லை? அவர்கள் யாராக இருந்தாலும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" என்றார்.
இதையும் படிங்க:ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்: நாடாளுமன்ற நடைமுறைகள் அவமதிப்பு - எதிர்க்கட்சியினர் கண்டனம்