விஜயபுரா (கர்நாடகா):கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் பாஜக எம்எல்ஏ ஒருவர் முந்தைய பாஜக ஆட்சியின் போது கரோனா காலத்தில் ரூ.40 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்து இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது.
பாஜக எம்எல்ஏ பசன் கவுடா யத்னால் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “எனக்கு நோட்டீஸ் கொடுங்கள். கட்சியில் இருந்து நீக்கி விடுங்கள். நான் அவர்கள் அனைவரின் ரகசியத்தையும் வெளியிடுவேன். மாநிலத்தை என் கையில் கொடுத்தால் நான் கர்நாடகாவை முன்னோடி மாநிலமாக மாற்றுவேன்,
நான் பணத்திற்கு அடிமை இல்லை, கொள்ளை அடிக்க வேண்டிய அவசியமில்லை. எல்லோரும் விவசாயியின் பிள்ளை என்று சொல்லுகிறார்கள். விவசாயியின் பிள்ளை ஏன் அமெரிக்காவில் வீடு வாங்க வேண்டும். துபாயில் ஏன் சொத்து குவிக்க வேண்டும். யார் யார் கொள்ளை அடித்தார்கள்? எங்கெல்லாம் சொத்து சேர்த்தார்கள் என்பதெல்லாம் நான் கண்டுபிடிப்பேன்.
கரோனா காலத்தில் 45 ரூபாய் மாஸ்கிற்கு அரசு எவ்வளவு செலவு செய்தது என்பது எனக்குத் தெரியும். ஒரு மாஸ்கிற்கு 485 ரூபாய்க்கு பில் போட்டனர். பெங்களூரில் 10 ஆயிரம் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அந்த 10 ஆயிரம் படுக்கைகள் வாடகைக்கு எடுக்கப்பட்டன. அந்த வாடகை பணத்தில் படுக்கைகளை வாங்கி இருந்தால் இரண்டு அல்லது அதற்கு மேலும் படுக்கைகளை வாங்கி இருக்க முடியும். கரோனா காலத்தில் ரூ.40 ஆயிரம் கோடி கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது.