பெங்களூரு: நாட்டில் கரோனா தொற்றுப் பாதிப்பு கணிசமாக குறைந்துவந்தாலும், சில மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. ஏற்கெனவே மருத்துவ ஆலோசகர்கள், வல்லுநர்கள் மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
இதனிடையே, கர்நாடக மாநிலத்தில் குழந்தைகளிடையே கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநில அரசு கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்துவருகிறது. அதைத்தொடர்ந்து நேற்று (ஆகஸ்ட் 12) மாநிலத்தில் மத, கலாசார, பொழுதுபோக்கு கூட்டம் / ஊர்வலங்களுக்குத் தடைவிதித்துள்ளது.
அதன்படி, பொது இடங்களில் மொகரம், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மொகரம் பண்டிகை நாள்களில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்குள்பட்ட குழந்தைகள் தொழுகைகளில் பங்கேற்க அனுமதி இல்லை. பொது இடங்களில் ஒருவரையொருவர் கட்டி அணைத்து வாழ்த்து கூறுதலுக்கு அனுமதி இல்லை.
அதேபோல, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை, பொதுமக்கள் தங்களின் வீடுகளில் மட்டுமே கொண்டாட வேண்டும். பொது இடங்களில் பந்தல் போட்டு சிலையை வைக்க அனுமதி கிடையாது. சிலை கரைப்பின்போது ஊர்வலமாகச் செல்ல அனுமதி கிடையாது.
இதையும் படிங்க:பெங்களூருவில் 240 குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு!