கர்நாடகா மாநிலம் சிவமொக்கா பகுதியில், கடந்த ஞாயிறு அன்று பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த ஹர்ஷா நாகராஜ் என்ற நபர் கொலை செய்யப்பட்டார்.
ஹிஜாப் அணிவதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து அப்பகுதியில் அசாதாரண நிலை நிலவிவருகிறது.
கொலை செய்யப்பட்ட ஹர்ஷாவின் இறுதி ஊர்வலத்தின் போது அப்பகுதியில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இந்நிலையில், அங்கு சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை கருதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிவமொக்காவில் சுமார் 1,200 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக இதுவரை ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைதான ஆறு பேரில் 30 வயது நபர் ஒருவரும், மற்ற நபர்கள் 20 மற்றும் 22 வயது கொண்டவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கல்வி நிலையங்களில் தடை உத்தரவை மீறி மாணவிகள் ஹிஜாப் அணிந்துவந்து கல்லூரிகளுக்குள் அனுமதிக்குமாறு நிர்வாகத்தை வற்புறுத்தி போராட்டம் நடத்திவருகின்றனர். முக்கியமாக கொப்பல், பெல்காவி, விஜயபூர், சிக்கமக்களூரு, சிவமொக்கா ஆகிய இடங்களில் இது தொடர்பான போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், தற்போது பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஹாட் பாக்ஸ், கொலுசு கொடுத்து பெற்ற வெற்றிதான் திராவிட மாடலா? - அண்ணாமலை அதிரடி