கர்நாடகா: கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதேபோல் பாஜகவின் வாக்கு வங்கியை குறிவைத்து காலி செய்யும் நோக்கில் காங்கிஸும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பாஜகவுக்கு லிங்காயத்துகளிடம் உள்ள ஆதரவைக் குறைக்கும் வகையில் காங்கிரஸ் பிரசாரம் செய்து வருகிறது.
காங்கிரஸுக்கு வலு சேர்க்கும் வகையில், ஜெகதீஷ் ஷெட்டர் உள்பட லிங்காயத் சமூகத் தலைவர்கள் இருவர் பாஜகவிலிருந்து விலகி அண்மையில் காங்கிரஸில் இணைந்தனர். இதனால் பாஜகவினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாஜகவுக்கு ஆதரவாக கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகரான சுதீப், நடிகர் தர்ஷன் உள்ளிட்டோர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கன்னட சினிமாவின் முன்னணி நடிகராகத் திகழ்ந்த நடிகர் ராஜ்குமாரின் மருமகளும், நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியுமான கீதா சிவராஜ்குமார் இன்று(ஏப்.28) காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவர் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகி, காங்கிரஸில் இணைந்துள்ளார். கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் முன்னிலையில் தன்னை காங்கிரஸில் இணைத்துக் கொண்டார். அப்போது, கீதா சிவராஜ்குமாரின் சகோதரர் மது பங்காரப்பா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கீதா சிவராஜ்குமார், "எனது சகோதரர் இருக்கும் இடத்திலெல்லாம் நானும் இருப்பேன். நாளை முதல் எனது சகோதரர் மது பங்காரப்பாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய இருக்கிறேன். சில இடங்களில் எனது கணவரும் பிரசாரம் செய்வார். காங்கிரஸ் கட்சியில் இணைவது மிக்க மகிழ்ச்சி. சகோதரர் போட்டியிடும் சொரப் தொகுதியில் எனது கணவர் சிவராஜ்குமார் பிரசாரம் செய்வார்" என்று கூறினார்.