போபால்:மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சராக சிவராஜ் சிங் சவுகான் உள்ளார். அம்மாநிலத்தில் எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவராக கமல்நாத் பதவி வகித்து வந்தார்.
இந்தநிலையில், எதிர்க்கட்சி தலைவர் பதவியை கமல்நாத் இன்று (ஏப்.28) ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைத்துள்ளார். இதை சோனியா காந்தி ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கமல்நாத், தற்போது மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக உள்ளார். 'ஒரு நபருக்கு, ஒரு பதவி' என்ற கட்சியின் கொள்கைபடி எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சராகவும், முன்னாள் ஒன்றிய அமைச்சராகவும் கமல்நாத் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, சட்டப்பேரவை புதிய காங்கிரஸ் கட்சித் தலைவராக கோவிந்த் சிங்கை சோனியா காந்தி நியமித்துள்ளார். கோவிந்த் சிங், பிகிந்த மாவட்டத்தில் உள்ள லஹார் தொகுதி எம்எல்ஏ ஆவார்.
இதையும் படிங்க: 5ஆவது மாட்டுத் தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத்துக்கு ஜாமீன்!