கலாபுரகி: நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பாலியல் வன்கொடுமை தொடர்பான செய்திகள் தினந்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் கலாபுரகியைச் சேர்ந்த பள்ளி மாணவி, பெண்களின் பாதுகாப்புக்காக 'ஆன்டி ரேப் ஸ்மார்ட் ஃபுட் வேர்'-ஐ வடிவமைத்துள்ளார்.
விஜயலட்சுமி பிரதாரா என்ற மாணவி தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், பெண்களின் பாதுகாப்புக்காக தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் காலணிகளை வடிவமைத்துள்ளார்.
இதில் 'பிளிங்க் ஆப் லிங்க்' தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு காலணியில் ஷாக் அடிக்கும் தொழில்நுட்பமும், மற்றொன்றில் ஜிபிஎஸ் மூலம் செய்தி அனுப்பும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக நேரிட்டால், காலணியில் உள்ள பட்டனை அழுத்தினால், வன்கொடுமை செய்ய முயற்சிக்கும் நபர் மீது 0.5 ஆம்ப்ஸ் மின்சாரம் பாயும். இந்த ஷாக்கில் இருந்து அந்த நபர் மீண்டு வருவதற்குள் அந்த பெண் அங்கிருந்து தப்பிவிட முடியும்.
அதேபோல் 3 அல்லது 4 பேர் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டால், ஜிபிஎஸ் வசதி கொண்ட மற்றொரு காலணியில் உள்ள பட்டனை அழுத்தினால், லைவ் லொக்கேஷனுடன் அபாய செய்தியை பெற்றோருக்கும் காவல்துறைக்கும் அனுப்பப்படும். அவசர காலங்களில் குறுஞ்செய்திகளை அனுப்பவும், அதற்கான செல்போன் எண்களை சேமித்து வைக்கவும், இந்த காலணிகளில் வசதி உள்ளது.