சண்டிகர்(பஞ்சாப்): ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சீக்கிய வழிபாட்டுத் தலமான குருத்வாராவில் கடந்த ஜூன் 18ஆம் தேதி பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதனால் அங்குள்ள சீக்கியர்கள் வசிக்கும் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. பலர் இந்தியாவுக்கு திரும்ப முயற்சித்து வருகின்றனர்.
இந்தநிலையில், சிரோமணி குருத்வாரா பர்பந்தக் குழு (எஸ்ஜிபிசி) ஆப்கானிஸ்தானில் சிக்கித்தவிக்கும் சீக்கியர்களை மீட்க முன்வந்துள்ளது. இதுகுறித்து எஸ்ஜிபிசி தலைவரும், வழக்கறிஞருமான ஹர்ஜிந்தர் சிங் தாமி கூறுகையில், "ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வர விரும்பும் சீக்கியர்களுக்கான விமான டிக்கெட் செலவை எஸ்ஜிபிசி ஏற்கும். அங்குள்ளவர்கள் பயப்பட வேண்டாம். சீக்கியர்களை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.