டெல்லி:இயக்குனர் லீனா மணிமேகலை தற்போது "காளி" என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். அதன் போஸ்டர் அண்மையில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. போஸ்டரில் காளி வேடமணிந்த பெண் ஒருவர், வாயில் சிகரெட் மற்றும் கையில் எல்ஜிபிடிகியூ சமூகத்தில் பிரைட் கொடியை பிடித்திருந்தார். இந்த போஸ்டருக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, காளி போஸ்டருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மொய்த்ரா, காளி என்பது இறைச்சி உண்ணும், மதுவை ஏற்கும் தெய்வம் என்றும்- இதுபோன்ற பல்வேறு வழிபாட்டுக் கலாச்சாரங்கள் இந்தியாவில் இருக்கின்றன என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் அவரவருக்கு விருப்பமான வகையில் கடவுளை வழிபட உரிமை இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் கண்டனம் தெரிவித்திருந்தது. அது மஹுவா மொய்த்ராவின் தனிப்பட்ட கருத்து என்றும், அதில் கட்சிக்கு தொடர்பில்லை என்றும் திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தனது நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என எம்.பி மஹுவா மொய்த்ரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், " நான் எனது கருத்தில் நிற்கிறேன். எனது கருத்து தவறு என்று நிரூபிக்கும்படி பாஜகவினருக்கு சவால் விடுகிறேன். மேற்குவங்கத்தில் எந்த இடத்தில் என் மீது நீங்கள் வழக்குப்பதிவு செய்தாலும், அதற்கு 5 கிலோ மீட்டருக்குள் காளி கோயிலில் இறைச்சி வைத்து வழிபடுவதை நீங்கள் பார்க்க முடியும். எனது மாநிலத்தில் எனக்கு எதிராக அவர்கள் நடவடிக்கை எடுப்பதை காண ஆர்வத்துடன் இருக்கிறேன். நான் கூறியது உண்மை என எனக்குத் தெரியும். அதை தவறு என நினைப்பவர்கள், நிரூபித்துக் காட்டலாம்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஓமன் சிறையில் சிக்கித் தவிக்கும் பீகார் பெண் - விசாரணையை தொடங்கிய போலீஸ்