திருவனந்தபுரம்: காங்கிரஸ் கட்சியின் கேரள மாநிலத் தலைவராக ராகுல் காந்தி என்னை நியமித்துள்ளார் என்ற தகவலை பெற்றேன். அத்துடன் பதவியையும் மனமகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டேன் என கே சுதாகரன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் கேரள மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே சுதாகரன், கண்ணூர் மக்களவை தொகுதி எம்பி ஆவார். அவருடன் கே சுரேஷ், பிடி தாமஸ் மற்றும் டி சித்திக் ஆகியோரும் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து கே சுதாகரன் கூறுகையில், “காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தும் முயற்சியில் என் மீது நம்பிக்கை வைத்து ராகுல் காந்தி எனக்கு வாய்ப்பளித்துள்ளார். நான் நிச்சயமாக அவரின் எண்ணத்தை செயல்படுத்தி காட்டுவேன். காங்கிரஸ் கட்சியை வளர்க்கும் பொருட்டும், வலிமைப்படுத்தவும் நான் அனைவருடனும் நட்பு பாராட்டி நடந்துகொள்வேன். நான் உறுதியாக கூறுகிறேன், காங்கிரஸ் அடுத்த 6 மாதத்தில் மீளும். நம் மக்களும் இதற்காகதான் காத்திருக்கின்றனர்” என்றார்.