கர்நாடகா: கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகி நான்கு நாட்கள் ஆகியும், கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார்? என்று தீர்மானிப்பதில் இழுபறி நிலவி வருகிறது. முதலமைச்சர் பதவியை கைப்பற்றுவதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முக்கிய காரணமாக திகழ்ந்த டி.கே.சிவக்குமார்தான் அடுத்த முதலமைச்சராக வர வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல், கட்சியின் மூத்த தலைவரும் 9 முறை எம்எல்ஏவாக தேர்வானவரும், முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா அடுத்த முதல்வராக வர வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். முதலமைச்சரை தேர்வு செய்வது தொடர்பான காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், முதலமைச்சர் யார்? என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை கட்சி மேலிடத்திடம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான உயர்மட்ட ஆலோசனை டெல்லியில் நடைபெற்று வருகிறது. சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரும் டெல்லி சென்று கட்சியின் உயர்மட்ட தலைவர்களை தனித்தனியாக சந்தித்து வருகின்றனர். நேற்று (மே.16) டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை இருவரும் தனித்தனியாக சந்தித்துப் பேசினர். கட்சிக்காக தாங்கள் ஆற்றிய பணிகளை எடுத்துக்கூறி, முதலமைச்சர் பதவியை கோரியதாக தெரிகிறது. ஆனால், இருவரும் முதலமைச்சர் பதவியை அடைய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த கட்டமாக இருவரும் இன்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியை சந்தித்துப் பேசவுள்ளனர்.