டெல்லி:காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்தி கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவின் கடைக்கோடியான கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் நோக்கி தெற்கில் இருந்து வடக்காக பாரத் ஜோடோ யாத்திரை என்னும் நடை பயணத்தை மேற்கொண்டார்.
இந்த நடைபயணத்தின் போது கடந்த வந்த பாதையில் சந்தித்த ஒவ்வொரு மாநில மக்களிடமும் ராகுல்காந்தி குறைகளைக் கேட்டறிந்தார். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு இந்த பாரத் ஜோடா யாத்திரை மிகவும் உதவிகரமாக இருந்ததாக கூறப்பட்டது. மேலும், தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பாரத் ஜோடா யாத்திரை மேற்கொண்டது போல், கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி மணிப்பூரில் இருந்து மும்பை வரை “பாரத் நியாய யாத்திரை” மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் துவங்கி மும்பை வரை ஜனவரி 14 முதல் மார்ச் 20 வரை இந்த யாத்திரை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த யாத்திரையை ஜனவரி 14ஆம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பாலில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே துவங்கி வைக்க உள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்து உள்ளார்.
மேலும், இந்த யாத்திரையை மணிப்பூரில் தொடங்குவதற்கான காரணம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “நாங்கள் ஏற்கனவே தெற்கில் இருந்து வடக்கு நோக்கி யாத்திரை மேற்கொண்டுள்ளோம். இப்போது கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி யாத்திரை மேற்கொள்ள உள்ளோம். மணிப்பூர் இல்லாமல் எப்படி யாத்திரை மேற்கொள்ள முடியும், மணிப்பூர் மக்களின் வலியைக் குணப்படுத்த முயற்சிக்கிறோம்” என கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவிக்கும் வீடியோ காங்கிரஸ் கட்சியின் X சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த பதிவில், “இந்த யாத்திரை மணிப்பூர், நாகாலாந்து, அசாம், மேகாலயா, மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா என 14 மாநிலங்கள் மற்றும் 85 மாவட்டங்களில் வழியாக 6 ஆயிரத்து 200 கி.மீ தூரம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த யாத்திரை பேருந்து பயணம் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது, மேலும் அவ்வப்போது சில குறுகிய நடைப் பயணங்களும் மேற்கொள்ளப்படும்” என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: மத்திய நிதியமைச்சருக்கு கொக்கி போட்ட பிரேமம் பட இயக்குநர்: வலைத்தளங்களில் வைரலாகும் அல்போன்சின் கேள்விகள்!