சென்னை:பிரபல திரைப்பட நடிகை குஷ்பு, கடந்த 2010ஆம் ஆண்டு திமுகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். இதனையடுத்து 2014ஆம் ஆண்டு திமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்த குஷ்பு, பின்னர் அதே ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி சோனியா காந்தியைச் சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இருப்பினும் காங்கிரஸ் கட்சியில் உள்ள அதிருப்தி காரணமாக அக்கட்சியிலிருந்து விலகிய குஷ்பு, 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். இவ்வாறு பாஜகவில் இணைந்த நடிகை குஷ்புக்கு தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக குஷ்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து குஷ்பு கூறுகையில், "தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு முறையும் பெண்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் குரல் கொடுத்து வருகிறேன். பெண்களின் உரிமைக்காகவும், சுயமரியாதைக்காகவும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறேன்.
பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு நியாயம் வாங்கிக் கொடுக்கும் விதமாக எனக்கு மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். இதற்காக இந்திய அரசிற்கும், பிரதமருக்கும் மற்றும் தேசிய ஆணையத்தின் கமிட்டி உறுப்பினர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்கள் தங்களுக்கு எதிரான கொடுமைகளைத் தைரியத்துடன் புகாரளிக்க வேண்டும்" என்றார்.
மேலும், “எதுவாக இருந்தாலும் அலைபேசி மூலமாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ என்னைத் தொடர்பு கொள்ளும் பட்சத்தில், உடனடியாக நடவடிக்கை எடுப்பேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மற்ற கட்சியிலிருந்த ஒரு நபர் எங்கள் கட்சியைச் சார்ந்த பெண்களை இழிவாகப் பேசினார். நாங்கள் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தோம். அவரை நேரடியாக அழைத்து மன்னிப்பு கேட்க வைத்தனர். இது போன்ற நம்பிக்கையை நாங்கள் பெண்களுக்குத் தருகின்றோம். கட்சிக்கும், தற்போது எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புக்கும் தொடர்பில்லை. இந்த பதவி தேசியம் சார்ந்தது. பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க பணியாற்றுவேன்" என்றார்.
இதனிடையே, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட குஷ்புக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு தமிழ்நாடு பாஜக சார்பாக வாழ்த்துகள். இந்த பதவி, அவரது விடாமுயற்சி மற்றும் பெண்கள் உரிமைக்கான போராட்டத்துக்கு கிடைத்தது” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:நடிகை காயத்ரி ரகுராமை ஆபாசமாக சித்தரித்த பாஜக பிரமுகர்கள் மீது சைபர் கிரைம் வழக்கு!