தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ஜூனியர் சுதா சந்திரன்'... காலை இழந்தாலும் கலையாத கலை ஆர்வம்... ஒரு தன்னம்பிக்கை ஸ்டோரி! - நடிகை சுதா சந்திரன்

கார் விபத்தில் காலை இழந்தாலும், கலை ஆர்வத்தால் அதில் இருந்து மீண்டு வந்து ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை சுதா சந்திரன். அவரை போலவே சிறுமி ஒருவர், காலை இழந்த பிறகும் நடனத்தில் அசத்தி வருகிறார். இளைய தலைமுறையினருக்கு தன்னம்பிக்கையை விதைக்கும் அந்த சிறுமியை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

Junior Sudha chandran
ஜூனியர் சுதா சந்திரன்

By

Published : May 22, 2023, 7:21 PM IST

ஹைதராபாத்:சுதா சந்திரன்... நடிகையும், பரத நாட்டிய கலைஞருமான இவர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1965ம் ஆண்டு பிறந்தார். 1981ம் ஆண்டு திருச்சியில் நடந்த சாலை விபத்து, அவரது வாழ்க்கையை புரட்டிப் போட்டது. அப்போது சுதா சந்திரனுக்கு வயது 16.

காலில் படுகாயத்துடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்த மருத்துவர்கள், வலது காலை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தினர். அதன்படி சுதா சந்திரனின் வலது கால் அகற்றப்பட்டு, செயற்கை கால் பொருத்தப்பட்டது.

ஆனால் பரதநாட்டியம் மற்றும் நடிப்பு மீதான ஆர்வம் அவருக்கு துளியும் குறையவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு புத்துயிர் பெற்று மீண்டெழுந்தார். அவர் நம்பியது தன்னம்பிக்கையை மட்டுமே. அதன் பிரதிபலனாக சவுதி அரேபியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று பரதநாட்டியத்தில் அசத்தினார். சுதா சந்திரனின் திறமை திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. 1984ம் ஆண்டு தெலுங்கில் வெளியான மயூரி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் தர்மம், சின்ன தம்பி பெரிய தம்பி, சின்னப்பூவே மெல்லப் பேசு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார். மலையாளம், கன்னடம், பெங்காலி, இந்தி மொழி படங்களிலும் நடித்து திறமையை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் நடிகை சுதா சந்திரனை போலவே காலை இழந்தாலும், நடனத்தில் அசத்தி, நம்பிக்கையை விதைத்துள்ளார் ஒரு சிறுமி. இவரது கதை நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது. தெலங்கானா மாநிலம் ஜகிதைலா மாவட்டம் ராய்க்கல் மண்டல் பகுதியை சேர்ந்தவர் அஞ்சனா ஸ்ரீ. நான்கு வயது இருக்கும் போது, வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பள்ளிப் பேருந்து மோதியதில், காலில் படுகாயம் ஏற்பட்டது. மருத்துவர்கள் எவ்வளவோ சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காததால், கால் அகற்றப்பட்டது.

பின்னர், சிறுமி அஞ்சனாவுக்கு செயற்கைக் கால் பொருத்தப்பட்டது. விபத்து நேர்ந்த அதிர்ச்சியில் இருந்தும், காலை இழந்த கவலையில் இருந்தும் மெல்ல மெல்ல மீண்டு வந்தார். அப்போது தான் அஞ்சனாவின் வாழ்க்கையில் மீண்டும் ஒரு சோக புயல் வீசியது. கார் விபத்தில் அவரது மற்றொரு காலிலும் காயம் ஏற்பட்டது. சிறுமியை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு கதறியபடி ஓடினர் பெற்றோர். அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்றனர் மருத்துவர்கள். எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் தகடுகள் பொருத்தப்பட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்தது.

அடி மேல் அடியை எதிர்கொண்ட அஞ்சனா, கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை தேறி மீண்டு வந்தார். அவருடன் விளையாடிக் கொண்டிருக்கும் சக தோழிகள், நடன வகுப்புக்கு செல்வது ஏக்கத்தை ஏற்படுத்தியது. நம்மால் நடனம் ஆட முடியாது என மனதுக்குள் நொந்து கொண்டார். எனினும் மருத்துவர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் அளித்த ஊக்கத்தால் குச்சிப்புடி நடன பயிற்சிக்கு சென்றார் அஞ்சனா.

தற்போது தனது நடனத்தால் பலரது கவனத்தை ஈர்த்துள்ள அவர், அண்மையில் ஹைதராபாத்தில் உள்ள தியாகராஜ கலா பவனில் நடனமாடி அனைவரது பாராட்டையும் பெற்றார். இவரது வாழ்க்கை நடிகை சுதா சந்திரன் கடந்து வந்த பாதையை பிரதிபலிக்கிறது. தமக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது மருத்துவர் தான் என்றும், ஆனாலும் நடிகை சுதா சந்திரன் தான் தனக்கு ரோல் மாடல் என கூறும் அஞ்சனா, அவரை சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

'ஒற்றை காலை வைத்துக் கொண்டு எப்படி நடனமாடுவார்'? 'ராசியில்லாத பெண்' என பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் தன்னம்பிக்கையாலும், குடும்பத்தினர் மற்றும் ஆசிரியர் அளித்த ஊக்கத்தினாலும் உயர்ந்து நிற்கிறார் அஞ்சான ஸ்ரீ!

ABOUT THE AUTHOR

...view details