சித்ரகுட் (மத்தியப்பிரதேசம்): மத்தியப்பிரதேச மாநிலம் சித்ரகுட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, “ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என கூறி உள்ளார். அவர், சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போன்று ஒழிக்க வேண்டும் எனவும் தெரிவித்து இருக்கிறார்.
இவ்வாறு கூறுவதற்கு அவர்களுக்கு எந்தவித தயக்கமும் இல்லை. உதயநிதியின் இந்த கருத்து, INDIA கூட்டணியின் அரசியல் யுக்தியா? வருகின்ற தேர்தலில் நீங்கள் (INDIA கூட்டணி) இந்து எதிர்ப்பு என்ற யுக்தியைத்தான் பயன்படுத்த உள்ளீர்களா? நீங்கள் பலமுறை நாட்டிற்கு தொடர்புடையவை மற்றும் உங்களது ‘Mohabbat ki Dukan’ (அன்பின் நிலையம்) என்பதையும் வெறுத்து உள்ளீர்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணி, பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி நாட்டின் வளர்ச்சிக்காக வேலை செய்து கொண்டிருக்கிறது. ஆனால், சமீபத்தில் மும்பையில் கூடிய ஒரு வாரிசு கூட்டணி, நாட்டின் கலாச்சாரத்திற்கு தீங்கு விளைவிப்பதில் பிஸியாக இருக்கிறது” என தெரிவித்து உள்ளார்.
முன்னதாக, சம உரிமை மற்றும் சமூக நீதிக்கு சனாதன தர்மம் எதிரானது எனவும், எனவே அதனை எதிர்த்தால் மட்டும் போதாது, சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் எனவும், மேலும், டெங்கு, மலேரியா, கரோனா போன்றவற்றை ஒழித்துக்கட்ட முயற்சிப்பது போன்றுதான் சனாதன தர்மமும் என தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருந்தார். இதனை சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசி இருந்தார்.